Wednesday, 20 September 2017

சொல்வேட்டை



நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் அவர்கள் தினமணி – தமிழ்மணி பகுதியில் சொல்வேட்டை என்ற பகுதியில் பிறமொழிச் சொற்களுக்கு உரிய தமிழ்ச்சொற்களைக் கண்டறிந்து தமிழ்வெளியில் உலாவரச் செய்தார்.

ஏராளமான தமிழன்பர்களும் தமிழாசிரியர்களும் பேராசிரியர்களும் ஒவ்வொரு வாரமும் தரப்படும் பிறமொழிச் சொல்லுக்குரிய தமிழ்ச்சொற்களைக் கண்டறிந்து அனுப்பி வந்தனர்.

ஒரேஒரு பிறமொழிச் சொல்லுக்கு ஏராளமான தமிழ்ச்சொற்கள் குவிந்தன. அவற்றுள் எதை எடுப்பது எதை விடுப்பது என்று திக்குமுக்காடி இருக்கலாம் நீதியரசர்.

சிக்கலான வழக்குகளிலும் சிறப்பான தீர்ப்பெழுதிப் புகழ்பெற்றவர் அவர் என்பதால் அலசி ஆராய்ந்து உரிய தகுந்த சொல்லைத் தேர்ந்தெடுத்துப் பரிந்துரைத்து வந்தார்.

இருபத்து நான்கு வாரங்களாக வந்திருந்த நிலையில் அதுகுறித்து எனக்குத் தெரியவில்லை. தினமணி நாளிதழை வாங்கவில்லை. இந்நிலையில் அந்தச் சொல்வேட்டையில் பங்கேற்ற எண்பது அகவை தாண்டிய பெரியவர் சத்தியமூர்த்தி அதுகுறித்து எனக்கு அறிமுகப்படுத்தினார். அவரெழுதும் சொற்கள் குறித்து என்னிடம் கருத்துரை கேட்பார். ஏதோ கேட்டுவிட்டாரே என்று எனக்கு என்ன தோன்றுகிறதோ அதனை அப்படியே சொல்வேன். ஏற்பார் சிலபோது. மறுப்பார் பலபோது.

பிறகு நானும் தினமணி இதழை ஞாயிறுகளில் வாங்கத் தொடங்கினேன். நீதியரசர் குறிப்பிடும் பிறமொழிச் சொல்லுக்கு நானும் தமிழ்ச்சொல் கண்டறிந்து அனுப்பினேன்.

ஊக்கமூட்டும் வகையில் அந்தச் சொற்களில் தகுந்த சொற்கள் பலவற்றையும் தமிழ்மணியில் வெளியிட்டார் நீதியரசர்.

அவ்வப்போது என் சொல்லையும் உரிய சொல்லாகத் தேர்ந்தெடுத்து அறிவித்தார். அந்த ஊக்கத்தில் சொல்வேட்டை ஆடினேன் ஒவ்வொரு வாரமும்.

சென்னையிலிருந்து தரைவழி தொலைபேசி எண்ணிலிருந்து இரண்டு மூன்று முறை எனக்கு அழைப்புகள் வந்தன. புதிய எண் என்றாலும் எடுத்துப் பேசும் வழக்கம் அப்போது எனக்கில்லை.

தொடர்ந்து அந்த எண்ணிலிருந்து அழைப்பு வருகிறதே என்று ஒருநாள் அவ்வாறு அந்த அழைப்பை ஏற்றுக் காதுகொடுத்தேன்.

அன்பைக் குரல்வழியாகவும் வழிய விடுகிற அமுதிசை கேட்டேன். ஆம் நீதியரசர்தான் பேசினார். அமர்ந்திருந்த நான் சடாரென எழுந்து நின்று அய்யா அய்யா என்றே அடிக்கடிச் சொல்லிப் பேசினேன்.

வழக்கறிஞராக நான் பணியாற்றுவது குறித்து உசாவினார். தமிழ்படிக்காத தங்களைப் போன்றவர்கள் சொல்வேட்டையில் பங்கேற்பது பாராட்டுக்குரியது என்றார். சற்று மேலே சென்று தமிழ்படித்தவர்களை விடவும் பிறதுறையினர்தான் தகுந்த சொற்களைக் கண்டறிந்து அளிக்கின்றனர் என்றார்.

நீதியரசர் அவர்கள் ஆங்கில இலக்கியத்திலும் ஆழம் காண்பவர். தமிழ் இலக்கியத்திலும் மூழ்கி முத்தெடுப்பவர். சமற்கிருத இலக்கியங்களிலும் பயிற்சி உள்ளவர். எனவே சொல்வேட்டை பகுதியில் புதுப்புது செய்திகளையும் சொல் உருவான வரலாறுகளையும் சொல்புழங்கும் முறையையும் சுவையாகவும் சுருக்கமாகவும் சொல்லிச் சொல்லுக்கு மகுடம் சூட்டினார்.

ஐம்பது வாரங்கள் வரை மட்டுமே சொல்வேட்டை ஆடிய நீதியரசர், சற்று ஓய்வெடுத்துக்கொண்டார். தமிழ்மணியில் வெளியாகித் தமிழுக்குச் செல்வம் சேர்த்த சொல்வேட்டை,  அதே பெயரில் நூலாகவும் வந்துள்ளது.

அதன்பிறகு,

தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் கணையாழி ஆசிரியருமான முனைவர் மா. இராசேந்திரன் அவர்கள், சொல்வேட்டையைத் தொடர்ந்து சொல்புதிது என்ற பகுதிக்குத் தலைமை ஏற்றார்.

கணினி, செல்பேசி, இணையம், தகவல் ஊடகம் என மாறிவரும் உலகுக்கு ஏற்ப அரிய கலைச்சொற்களுக்கு உரிய தமிழ்ச்சொல்லை உருவாக்க உழைத்து அதில் வெற்றியும் கண்டார்.

அந்தச் சொல்புதிது பகுதியிலும் வாரம்தோறும் நான் புதிய சொற்களைப் படைத்தும் சொற்கூட்டுச் செய்தும், புழக்கத்தில் உள்ள சொற்களைக் கண்டறிந்தும் மாறுதல் செய்தும் அனுப்பி வந்தேன். அவரும் என் சொற்கள் சிலவற்றை உரிய சொல் எனத் தேர்ந்தெடுத்தார். அந்தச் சொல்புதிது பகுதியும் நூலாக வெளிவந்துள்ளது.

அதன்பின்..

பேராசிரியர் தெ. ஞானசுந்தரம் அவர்கள், சொல்தேடல் என்ற பெயரில் சொல்வேட்டையைத் தொடர்ந்தார். கம்பனிலும் தமிழ்இலக்கியங்களிலும் இலக்கண அறிவிலும் தேர்ந்து தெளிந்தவர் அவர். அவருடைய சொல்தேடல் பகுதியில் இலக்கியம், வரலாறு, மெய்யியல், பிறநாட்டு இலக்கியம், சொல்வந்த கதை, நகைச்சுவை போன்ற அத்தனையும் கலந்து ஐந்தமுது (பஞ்சாமிர்தம்) போலப் பத்தமுது படைத்து வந்தார். அந்தச் சொல்தேடலும் நூலாக வரவேண்டும் என்ற தமிழன்பர்கள் விருப்பம் நிறைவேறவில்லை இன்னும்.

பிறகு...

இந்து தமிழ்நாளிதழில் ஆசை அவர்கள் அறிவோம் நம்மொழியை என்ற பகுதியைத் தொடங்கினார். அதில் வாரம்தோறும் சொல்தேடல் நடத்தினார். என்னைப்போல் நேயர்கள் பலர் அதில் பங்கேற்றனர் . ஆசை அவர்கள் ஆங்கில இலக்கியம் படித்தவர். க்ரியா தற்காலத் தமிழ் அகரமுதலித் தொகுப்புப் பணியில் ஈடுபட்டு உழைத்தவர். பல மொழியறிஞர்களோடு பழகியவர். அவருடைய பட்டறிவும் படிப்பறிவும் சொல்தேடல் பகுதிக்கு உரம் சேர்த்தது. இந்து தமிழ்நாளிதழிலும் என் சொற்கள் தேர்வு பெற்றன. ஆசை அவர்களும் என்னை அலைபேசியில் தொடர்பு கொண்டு ஊக்கப்படுத்தினார்.

பள்ளியில் நான் படித்தபோதே பெருஞ்சித்திரனார் நடத்திய தமிழ்ச்சிட்டு, தென்மொழி இதழ்களைப் படித்து வந்திருக்கிறேன். அதனால் தூயதமிழ்ச் சொற்களில் ஆர்வம் எனக்கு இயல்பாகவே ஏற்பட்டுவிட்டது.

இந்தப் பிறமொழிச் சொல்லுக்குத் தமிழ்ச்சொல் எதுவெனத் தமிழ்ப்பேராசிரியர்கள் பலரும் என்னிடத்தில் கேட்கிற வழக்கம் நிலவுகிறது. இது எனக்கு ஒருவகையில் பெருமையையும் சேர்த்துள்ளது.

தினமணி தமிழ்மணியில் வெளியான சொல்வேட்டை, சொல்புதிது, சொல்தேடல் மற்றும் இந்து தமிழ் நாளிதழில் வெளிவந்த சொல்தேடல் பகுதிகளில் வெளியான பிறமொழிச் சொற்களுக்கு நானும் சொற்பட்டியல் அனுப்பினேன்.

அந்தச் சொற்பட்டியல்களை அன்பர்களுக்கு அப்படியே தருகிறேன்.

ஒரு பிறமொழிச் சொல்லுக்கு நான் பல சொற்களைத் தந்துள்ளேன். அந்தச் சொற்களில் எந்தச் சொல் மிக்குயர்ந்தது என்று நான் தீர்மானிக்கவில்லை. இப்போதும் நான் இதுதான் சரியான சொல் என்று உறுதிப்படுத்தப் போவதும் இல்லை. புதுச்சொல் உருவாக்கும் போட்டியில் வென்ற சொல் எதுவெனக் குறிப்பெடுத்து வைக்கவில்லை நான். அதனால் வென்ற சொல்லை வெளியிட முடியாமல் போய்விட்டது.

சொல்தேடலில் எதுவும் இறுதியான முடிவல்ல. காலமே இறுதியான உறுதியான சொல்லைத் தேர்ந்தெடுக்கும். உங்களுக்கு எந்தச் சொல் பொருத்தமோ அந்தச் சொல்லைக் கையாய முயலுங்கள். பொருள் மாறிவிடாது. போகப் போக- புழங்கப் புழங்க தகுந்த சொல் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும்.

இனி-
சொல்வேட்டை ஆடுவோம் வாருங்கள்.

அன்புடன்
கோ. மன்றவாணன்




ஜிகினா

ஜிகினா என்ற சொல்லுக்குப் பொருத்தமான தமிழ்ச்சொல் யாது?
குருநாத்தகடு என்ற சொல் ஏற்கனவே உள்ளது.
புதிய சொற்களாகக் கீழ்க்குறிப்பிட்ட சொற்களைப் பயன்படுத்தலாம்.
மின்னி, மினுக்கி, ஒளிரி, மிளிரி, ஒளிரிழை, மிளிரிழை,
மின்மினுத் தகடு, மினுமினு, மின்மினு,
ஒளிசிமிட்டி, (சிமிட்டி என்பது சிமிட்டுதல் என்பதைக் குறிக்கும்.)

தற்போது ஜிகினா, தூள்வடிவிலும் உள்ளதால்....
ஒளிர்பொடி, மிளிர்பொடி, ஒளிர்தூள், மிளிர்தூள், மின்மினுப்பூச்சு, மின்மினுத்தூள், மினுமினுத்தூள்
ஆகிய சொற்களையும் பயன்படுத்தலாம்.

மேற்கண்ட அத்தனை சொற்களிலும் எல்லா நிலைகளிலும் பொருந்திவரும் எளிமையான சொல்லாக மினுக்கி என்ற சொல் உள்ளது என்று கருதுகிறேன்.


  

Wind chimes

Wind chimes என்ற ஆங்கிலச் சொல்லுக்கு உரிய தமிழ்ச்சொல் என்ன?
இசைச்சரம், இசைத்தோரணம், மணிச்சரம், மணித்தொங்கல், மணிக்கொத்து, மணியூசல், ஒலிச்சரம், ஒலித்தோரணம் ஆகிய சொற்களைப் பயன்படுத்தலாம்.

சரம், தொங்கல், ஊசல், தோரணம் ஆகியவை காற்றில் ஆடும் தன்மை கொண்டவை. எனவே காற்று என்ற சொல்லை இணைக்கத் தேவையில்லை. Water Fallsக்கு அருவி என்ற சொல்லிருக்க, நீர்வீழ்ச்சி என்று சொல்பெயர்ப்புச் செய்தது போலிருக்கும், காற்று என்ற சொல்லை இணைப்பது.  
  
மணி என்பதும் இசையை எழுப்பக் கூடியதே. உடன் அழகிய வேலைப்பாடு அமைந்த கலைப்பொருட்களையும் குறிக்கும்.

எனினும் காற்று என்ற சொல்லை இணைக்கத்தான் வேண்டுமெனில்.....

காற்று இசைச்சரம், காற்று இசைத்தோரணம், காற்று மணிச்சரம், காற்று மணிக்கொத்து, காற்று மணிஊசல், காற்றிசை மணி, (அ) காற்று இசைமணி, காற்றோசை மணி, காற்றொலிச்சரம், காற்றொலித்தோரணம் எனவரும் சொற்களையும் பயன்படுத்தலாம்.

விண்ட் சைம்ஸ் என்ற சொல், பன்மையாக இருக்கிறது. பல மணிகள், பல பொருட்கள் ஒருங்கிணைந்த அமைப்பாக இருப்பதால் பன்மை எனப்படுகிறதோ என்னவோ? சரம், தோரணம், கொத்து ஆகிய சொற்களும் பல மணிகள், பல பொருட்கள் ஒருங்கணைந்த அமைப்பாகத்தான் இருக்கின்றன. அதன்படி சரம், தோரணம், கொத்து ஆகியவற்றில் பன்மைத்தன்மையும் உள்ளடங்கும். நான் சொல்வது தவறெனில், மேற்கண்ட சொற்களில் “கள்” என்ற பன்மை விகுதியை இணைத்துக் கொள்ளுமாறு பணிந்து வேண்டுகிறேன்.